சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் |
பன்னிரெண்டாம் திருமுறை |
இரண்டாம் காண்டம் |
10. கடல் சூழ்ந்த சருக்கம் |
10.1 கழற்சிங்க நாயனார் புராணம் |
4101
படிமிசை நிகழ்ந்த தொல்லைப் பல்லவர் குலத்து வந்தார்
கடிமதில் மூன்றும் செற்ற கங்கைவார் சடையார் செய்ய
அடிமலர் அன்றி வேறு ஒன்று அறிவினில் குறியா நீர்மைக்
கொடி நெடுந் தானை மன்னர் கோக் கழற்சிங்கர் என்பார். |
1 |
4102
கடவார் குரிசிலாராங் கழல் பெருஞ் சிங்கனார் தாம்
ஆடக மேரு வில்லார் அருளினால் அமரில் சென்று
கூடலர் முனைகள் சாய வடபுலம் கவர்ந்து கொண்டு
நாடற நெறியில் வைக நல் நெறி வளர்க்கும் நாளில். |
2 |
4103
குவலயத்து அரனார் மேவும் கோயில்கள் பலவும் சென்று
தவலரும் அன்பில் தாழ்ந்து தக்க மெய்த் தொண்டு செய்வார்
சிவபுரி என்ன மன்னும் தென் திருவாரூர் எய்திப்
பவம் அறுத்தாட் கொள் வார்தம் கோயில் உள் பணிய புக்கார். |
3 |
4104
அரசியல் ஆயத் தோடும் அங்கணர் கோயில் உள்ளால்
முரசுடைத்தானை மன்னர் முதல்வரை வணங்கும் போதில்
விரை செறிமலர் மென் கூந்தல் உரிமை மெல் இயலார் தம் உள்
உரை சிறந்து உயர்ந்த பட்டத்து ஒருதனித் தேவி மேவி. |
4 |
4105
கோயிலை வலம் கொண்டு அங்கண் குலவிய பெருமை எல்லாம்
சாயல் மா மயிலே போல் வாள் தனித் தனி கண்டு வந்து
தூய மென் பள்ளித் தாமம் தொடுக்கு மண்டபத்தின் பாங்கர்
மேயதோர் புதுப்பூ அங்கு விழுந்தது ஒன்று எடுத்து மோந்தாள். |
5 |
4106
புதுமலர் மோந்த போதில் செருத்துணைப் புனிதத் தொண்டர்
இதுமலர் திருமுற்றத்துள் எடுத்து மோந்தனளாம் என்று
கதும் என ஓடிச்சென்று கருவி கைக் கொண்டு பற்றி
மதுமலர் திருவொப்பாள் தன் மூக்கினைப் பிடித்து வார்ந்தார். |
6 |
4107
வார்ந்து இழி குருதி சோர மலர்க் கருங்குழலும் சோரச்
சோர்ந்து வீழ்ந்து அரற்றும் தோகை மயில் எனத் துளங்கி மண்ணில்
சேர்ந்து அயர்ந்து உரிமைத் தேவி புலம்பிடச் செம்பொன் புற்றுள்
ஆர்ந்த பேர் ஒளியைக் கும்பிட்டு அரசரும் அணைய வந்தார். |
7 |
4108
வந்து அணைவுற்ற மன்னர் மலர்ந்த கற்பகத்தின் வாசப்
பைந்தளிர்ப் பூங்கொம்பு ஒன்று பார்மிசை வீழ்ந்தது என்ன
நொந்து அழிந்து அரற்றுவாளை நோக்கி இவ்வண்டத்து உள்ளோர்
இந்த வெவ்வினை அஞ்சாதே யார் செய்தார் என்னும் எல்லை. |
8 |
4109
அந்நிலை அணைய வந்து செருத்துணையாராம் அன்பர்
முன் உறு நிலைமை அங்குப் புகுந்தது மொழிந்தபோது
மன்னரும் அவரை நோக்கி மற்று இதற்குத் தண்டம்
தன்னை அவ்வடைவே அன்றோ தடிந்திடத் தகுவது என்று. |
9 |
4110
கட்டிய உடைவாள் தன்னை உருவி அக்கமழ் வாசப்பூத்
தொட்டு முன் எடுத்த கையாம் முன்படத் துணிப்பது என்று
பட்டமும் அணிந்து காதல் பயில் பெரும் தேவியான
மட்டவிழ் குழலாள் செம்கை வளை ஒடும் துணித்தார் அன்றே. |
10 |
4111
ஒரு தனித் தேவி செங்கை உடைவாளால் துணித்த போது
பெருகிய தொண்டர் ஆர்ப்பின் பிறங்குஒலி புலி மேல் பொங்க
இரு விசும்பு அடைய ஓங்கும் இமையவர் ஆர்ப்பும் விம்மி
மருவிய தெய்வ வாச மலர் மழை பொழிந்தது அன்றே. |
11 |
4112
அரிய அத் திருத் தொண்டு ஆற்றும் அரசனார் அளவில் காலம்
மருவிய உரிமை தாங்கி மால் அயன் அரியார் மன்னும்
திரு அருள் சிறப்பினாலே செய்ய சே அடியின் நீழல்
பெருகிய உரிமை ஆகும் பேரருள் எய்தினாரே. |
12 |
4113
வையகம் நிகழ்க் காதல் மாதேவி தனது செய்ய
கையினைத் தடிந்த சிங்கர் கழல் இணை தொழுது போற்றி
எய்திய பெருமை அன்பர் இடம் கழியார் என்று ஏத்தும்
மெய்யருள் உடைய தொண்டர் செய்வினை விளம்பல் உற்றாம். |
13 |
திருச்சிற்றம்பலம் |
10.2 இடங்கழி நாயனார் புராணம் |
4114
எழுந்திரை மா கடல் ஆடை இரு நிலமா மகள் மார்பில்
அழுந்து பட எழுதும் இலைத் தொழில் தொய்யில் அணியினவாம்
செழுந்தளிரின் புடை மறைந்த பெடை களிப்பத் தேமாவின்
கொழுந் துணர் கோதிக் கொண்டு குயில் நாடு கோனாநாடு. |
1 |
4115
முருகுறு செங்கமல மதுமலர் துதைந்த மொய் அளிகள்
பருகுறு தெண் திரை வாவிப் பயில் பெடையோடு இரை அருந்தி
வருகுறு தண் துளி வாடை மறைய மாதவிச் சூழல்
குருகுறங்கும் கோனாட்டுக் கொடி நகரம் கொடும்பாளூர். |
2 |
4116
அந் நகரத்தினில் இருக்கும் வேளிர் குலத்து அரசு அளித்து
மன்னிய பொன் அம்பலத்து மணி முகட்டில் பாக்கொங்கின்
பன்னு துலைப் பசும் பொன்னால் பயில் பிழம்பாம் மிசை அணிந்த
பொன் நெடும் தோள் ஆதித்தன் புகழ் மரபில் குடி முதலோர். |
3 |
4117
இடங்கழியார் என உலகில் ஏறு பெரு நாமத்தார்
அடங்கலர் முப்புரம் எரித்தார் அடித்தொண்டின் நெறி அன்றி
முடங்கு நெறி கனவினிலும் உன்னாதார் எந்நாளும்
தொடர்ந்த பெரும் காதலினால் தொண்டர் வேண்டிய செய்வார். |
4 |
4118
சைவ நெறி வைதிகத்தின் தரும நெறியொடும் தழைப்ப
மை வளரும் திருமிடற்றார் மன்னிய கோயில்கள் எங்கும்
மெய் வழிபாட்டு அர்ச்சனைகள் விதிவழிமேல் மேல் விளங்க
மொய் வளர் வண் புகழ் பெருக முறை புரியும் அந்நாளில். |
5 |
4119
சங்கரன் தன் அடியாருக்கு அமுது அளிக்கும் தவம் உடையார்
அங்கு ஒருவர் அடியவருக்கு அமுது ஒரு நாள் ஆக்க உடன்
எங்கும் ஒரு செயல் காணாது எய்திய செய்தொழில் முட்டப்
பொங்கி எழும் பெரு விருப்பால் புரியும் வினை தெரியாது. |
6 |
4120
அரசர் அவர் பண்டாரத்து அந்நாட்டின் நெல் கூட்டின்
நிரை செறிந்த புரிபலவா நிலைக் கொட்ட காரத்தில்
புரை செறி நள்ளிருளின் கண் புக்கு முகந்து எடுப்பவரை
முரசு எறி காவலர் கண்டு பிடித்து அரசன் முன் கொணர்ந்தார். |
7 |
4121
மெய்த்தவரைக் கண்டு இருக்கும் வேல் மன்னர் வினவுதலும்
அத்தன் அடியாரை யான் அமுது செய்விப்பது முட்ட
இத் தகைமை செய்தேன் என்று இயம்புதலும் மிக இரங்கிப்
பத்தரை விட்டு இவர் அன்றோ பண்டாரம் எனக்கு என்பார். |
8 |
4122
நிறை அழிந்த உள்ளத்தால் நெல் பண்டாரமும் அன்றிக்
குறைவு இல் நிதிப் பண்டாரம் ஆன எலாம் கொள்ளை முகந்து
இறைவன் அடியார் கவர்ந்து கொள்க என எம்மருங்கும்
பறையறைப் பண்ணுவித்தார் படைத்த நிதிப்பயன் கொள்வார். |
9 |
4123
எண்ணில் பெரும் பண்டாரம் ஈசன் அடியார் கொள்ள
உள் நிறைந்த அன்பினால் உறு கொள்ளை மிக ஊட்டித்
தண் அளியால் நெடும் காலம் திருநீற்றின் நெறி தழைப்ப
மண்ணில் அருள் புரிந்து இறைவர் மலர் அடியின் நிழல் சேர்ந்தார். |
10 |
4124
மை தழையும் மணி மிடற்றார் வழித்தொண்டின் வழிபாட்டில்
எய்து பெரும் சிறப்பு உடைய இடங்கழியார் கழல் வணங்கி
மெய் தருவார் நெறி அன்றி வேறு ஒன்றும் மேல் அறியாச்
செய்தவராம் செருத்துணையார் திருத்தொண்டின் செயல் மொழிவாம் |
11 |
திருச்சிற்றம்பலம் |
10.3 செருத்துணை நாயனார் புராணம் |
4125
உள்ளும் புறம்பும் குலமரபின் ஒழுக்கம் வழுக்கா ஒருமை நெறி
கொள்ளும் இயல்பில் குடி முதலோர் மலிந்த செல்வக் குலபதியாம்
தெள்ளும் திரைகள் மதகு தொறும் சேலும் கயலும் செழுமணியும்
தள்ளும் பொன்னி நீர் நாட்டு மருக நாட்டுத் தஞ்சாவூர். |
1 |
4126
சீரின் விளங்கும் அப்பதியில் திருந்து வேளாண் குடி முதல்வர்
நீரின் மலிந்த செய்ய சடை நீற்றர் கூற்றின் நெஞ்சு இடித்த
வேரி மலர்ந்த பூங்கழல் சூழ் மெய் அன்பு உடைய சைவர் எனப்
பாரில் நிகழ்ந்த செருத் துணையார் பரவும் தொண்டின் நெறி நின்றார். |
2 |
4127
ஆன அன்பர் திருவாரூர் ஆழித் தேர்வித்தகர் கோயில்
ஞான முனிவர் இமையவர்கள் நெருங்கு நலம் சேர் முன்றிலினுள்
மான நிலவு திருப்பணிகள் செய்து காலங்களின் வணங்கிக்
கூனல் இளவெண் பிறைமுடியார் தொண்டு பொலியக் குலவு நாள். |
3 |
4128
உலகு நிகழ்ந்த பல்லவர் கோச் சிங்கர் உரிமைப் பெருந்தேவி
நிலவு திருப்பூ மண்டபத்து மருங்கு நீங்கிக் கிடந்தது ஒரு
மலரை எடுத்து மோந்ததற்கு வந்து பொறாமை வழித் தொண்டர்
இலகு சுடர்வாய்க் கருவி எடுத்து எழுந்த வேகத்தால் எய்தி. |
4 |
4129
கடிது முற்றி மற்றவள் தன் கருமென் கூந்தல் பிடித்து ஈர்த்து
படியில் வீழ்த்தி மணிமூக்கைப் பற்றி பரமர் செய்ய சடை
முடியில் ஏறும் திருப்பூ மண்டபத்து மலர் மோந்திடும் மூக்கைத்
தடிவன் என்று கருவியினால் அரிந்தார் தலைமைத் தனித்தொண்டர். |
5 |
4130
அடுத்த திருத் தொண்டு உலகறியச் செய்த அடல் ஏறு அனையவர்தாம்
தொடுத்த தாமம் மலர் இதழி முடியார் அடிமைத் தொண்டு கடல்
உடுத்த உலகில் நிகழச் செய்து உய்ய செய்ய பொன் மன்றுள்
எடுத்த பாத நிழல் அடைந்தே இறவா இன்பம் எய்தினார். |
6 |
4131
செங்கண் விடையார் திருமுன்றில் விழுந்த திருப்பள்ளித் தாமம்
அங்கண் எடுத்து மோந்த அதற்கு அரசன் உரிமைப் பெருந்தேவி
துங்க மணி மூக்கு அரிந்த செருத் துணையார் தூய கழல் இறைஞ்சி
எங்கும் நிகழ்ந்த புகழ்த்துணையார் உரிமை அடிமை எடுத்து உரைப்பாம். |
7 |
திருச்சிற்றம்பலம் |
10.4 புகழ்த்துணை நாயனார் புராணம் |
4132
செருவிலிபுத்தூர் மன்னும் சிவ மறையோர் திருக்குலத்தார்
அருவரை வில்லாளி தனக்கு அகத்து அடிமையாம் அதனுக்கு
ஒருவர் தமை நிகர் இல்லார் உலகத்துப் பரந்து ஓங்கிப்
பொருவரிய புகழ் நீடு புகழ்த்துணையார் எனும் பெயரார். |
1 |
4133
தம் கோனைத் தவத்தாலே தத்துவத்தின் வழிபடு நாள்
பொங்கோத ஞாலத்து வற்கடமாய்ப் பசி புரிந்தும்
எம் கோமான் தனை விடுவேன் அல்லேன் என்று இராப் பகலும்
கொங்கார் பன் மலர் கொண்டு குளிர் புனல் கொண்டு அர்ச்சிப்பார். |
2 |
4134
மால் அயனுக்கு அரியானை மஞ்சனம் ஆட்டும் பொழுது
சாலவுறு பசிப்பிணியால் வருந்தி நிலை தளர்வு எய்திக்
கோல நிறை புனல் தாங்கு குடம் தாங்க மாட்டாமை
ஆலமணி கண்டத்தார் முடி மீது வீழ்த்து அயர்வார். |
3 |
4135
சங்கரன் தன் அருளால் ஓர் துயில் வந்து தமை அடைய
அங்கணனும் களவின்கண் அருள் புரிவான் அருந்தும் உணவு
மங்கிய நாள் கழிவு அளவும் வைப்பது நித்தமும் ஒரு காசு
இங்கு உனக்கு நாம் என்ன இடர் நீங்கி எழுந்திருந்தார். |
4 |
4136
பெற்றம் உகந்து ஏறுவார் பீடத்தின் கீழ் ஒரு காசு
அற்றம் அடங்கிட அளிப்ப அன்பரும் மற்று அது கைக்கொண்டு
உற்ற பெரும் பசி அதனால் உணங்கும் உடம்பு உடன் உவந்து
முற்றுஉணர்வு தலை நிரம்ப முகம் மலர்ந்து களி கூர்ந்தார். |
5 |
4137
அந்நாள் போல் எந்நாளும் அளித்த காசு அது கொண்டே
இன்னாத பசிப் பிணி வந்து இறுத்த நாள் நீங்கிய பின்
மின்னார் செஞ்சடையார்க்கு மெய் அடிமைத்தொழில் செய்து
பொன்னாட்டின் அமரர் தொழப் புனிதர் அடிநிழல் சேர்ந்தார். |
6 |
4138
பந்தணையும் மெல் விரலாள் பாகத்தார் திருப் பாதம்
வந்தணையும் மனத் துணையார் புகழ்த்துணையார் கழல் வாழ்த்தி
சந்தணியும் மணிப் புயத்துத் தனவீரராம் தலைவர்
கொந்தணையும் மலர் அலங்கல் கோட்புலியார் செயல் உரைப்பாம். |
7 |
திருச்சிற்றம்பலம் |
10.5 கோட்புலி நாயனார் புராணம் |
4139
நலம் பெருகும் சோணாட்டு நாட்டி யத்தான் குடி வேளாண்
குலம் பெருக வந்து உதித்தார் கோட்புலியார் எனும் பெயரார்
தலம் பெருகும் புகழ் வளவர் தந்திரியராய் வேற்றுப்
புலம் பெருகத் துயர் விளைவிப்பப் போர் விளைத்துப் புகழ் விளைவிப்பார். |
1 |
4140
மன்னவன்பால் பெறும் சிறப்பின் வளம் எல்லாம் மதி அணியும்
பிஞ்ஞகர் தம் கோயில் தொறும் திரு அமுதின் படிபெருகச்
செந்நெல் மலைக் குவடு ஆகச் செய்து வரும் திருப்பணியே
பல் நெடும் நாள் செய்து ஒழுகும் பாங்கு புரிந்து ஓங்கும் நாள். |
2 |
4141
வேந்தன் ஏவலில் பகைஞர் வெம் முனைமேல் செல்கின்றார்
பாந்தள் பூண் என அணிந்தார் தமக்கு அமுது படியாக
ஏந்தலார் தாம் எய்தும் அளவும் வேண்டும் செந்நெல்
வாய்ந்த கூடவை கட்டி வழிக் கொள்வார் மொழிகின்றார். |
3 |
4142
தம் தமர்கள் ஆயினார் தமக்கு எல்லாம் தனித்தனியே
எந்தையார்க்கு அமுது படிக்கு ஏற்றிய நெல் இவை அழிக்க
சிந்தை ஆற்றா நினைவார் திருவிரையாக் கலி என்று
வந்தனையால் உரைத்து அகன்றார் மன்னவன் மாற்றார் முனைமேல். |
4 |
4143
மற்றவர் தாம் போயின பின் சில நாளில் வற்காலம்
உற்றலும் அச் சுற்றத்தார் உணவு இன்றி இறப்பதனில்
பெற்றம் உயர்த்தவர் அமுது படி கொண்டாகிலும் பிழைத்துக்
குற்றம் அறப் பின் கொடுப்போம் எனக் கூடு குலைத்து அழித்தார். |
5 |
4144
மன்னவன் தன் தெம் முனையில் வினை வாய்த்து மற்றவன்பால்
நல் நிதியின் குவை பெற்ற நாட்டியத்தான் குடித்தலைவர்
அந்நாளில் தமர் செய்த பிழை அறிந்தது அறியாமே
துன்னினார் சுற்றம் எலாம் துணிப்பன் எனும் துணிவினராய். |
6 |
4145
எதிர் கொண்ட தமர்க்கு எல்லாம் இனிய மொழி பல மொழிந்து
மதி தங்கு சுடர் மணி மாளிகையின் கண் வந்து அணைந்து
பதி கொண்ட சுற்றத் தார்க்கு எல்லாம் பைந் துகில் நிதியம்
அதிகம் தந்து அளிப்பதனுக்கு அழைமின்கள் என்று உரைத்து. |
7 |
4146
எல்லாரும் புகுந்த அதன்பின் இருநியம் அளிப்பார் போல்
நல்லார்தம் பேரோன் முன் கடை காக்க நாதன் தன்
வல்லாணை மறுத்து அமுதுபடி அழைத்த மறக்கிளையைக்
கொல்லாதே விடுவேனோ எனக் கனன்று கொலைபுரிவார். |
8 |
4147
தந்தையார் தாயார் மற்றுடன் பிறந்தார் தாரங்கள்
பந்தமார் சுற்றத்தார் பதி அடியார் மதி அணியும்
எந்தையார் திருப்படி மற்று உண்ண இசைந்தார் களையும்
சிந்த வாள் கொடு துணிந்தார் தீய வினைப் பவம் துணிப்பார். |
9 |
4148
பின் அங்குப் பிழைத்த ஒரு பிள்ளையைத் தம் பெயரோன் அவ்
வன்னம் துய்த்து இலது குடிக்கு ஒரு புதல்வன் அருளும் என
இந்நெல் உண்டாள் முலைப்பால் உண்டது என எடுத்து எறிந்து
மின்னல்ல வடிவாளால் இரு துணியாய் விழ ஏற்றார். |
10 |
4149
அந் நிலையே சிவபெருமான் அன்பர் எதிர் வெளியே நின்று
உன்னுடைய கை வாளால் உறுபாசம் அறுத்த கிளை
பொன் உலகின் மேல் உலகம் புக்கு அணையப் புகழோய் நீ
இந்நிலை நம்முடன் அணைக என்றே எழுந்து அருளினார். |
11 |
4150
அத்தனாய் அன்னையாய் ஆர் உயிராய் அமிர்தாகி
முத்தனாம் முதல்வன் தாள் அடைந்து கிளை முதல் தடிந்த
கொத்து அலர் தார்க் கோட்புலியார் அடிவணங்கிக் கூட்டத்தில்
பத்தராய் பணிவார் தம் பரிசினையாம் பகருவாம். |
12 |
சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி |
4151
மேவரிய பெரும் தவம் யான் முன்பு விளைத்தன என்னோ
ஆவதும் ஓர்பொருள் அல்லா என் மனத்தும் அன்றியே
நாவலர் காவலர் பெருகு நதி கிழிய வழி நடந்த
சேவடிப் போது எப்போதும் சென்னியினும் மலர்ந்தனவால். |
13 |
திருச்சிற்றம்பலம் |
கடல் சூழ்ந்த சருக்கம் முற்றிற்று. |